கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடனும் தங்களுக்கும் உரையாடி கொள்வதுடன், வீடியோ காலிலோ ஃபோன் காலிலோ பேட்டியும் கொடுத்துவருகின்றனர். 

அந்தவகையில், ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு இங்கிலாந்தின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர்  ஸ்டூவர்ட் பிராட் பேட்டியளித்துள்ளார். இங்கிலாந்து அணியில் 2006ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் ஸ்டூவர்ட் பிராட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் ஆடிவருகிறார்.

அணியின் சீனியர் பவுலரான பிராட், மற்றொரு சீனியர் பவுலரான ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் இணைந்து இங்கிலாந்து அணிக்காக இன்னும் வெற்றிகளை பெற்று கொடுத்துவருகின்றனர். ஆண்டர்சன் - பிராட் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி, ஆல்டைம் சர்வதேச கிரிக்கெட்டில் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடிகளில் ஒன்று. 

இங்கிலாந்து அணிக்காக 138 டெஸ்ட் போட்டிகளில் 485 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள மிகச்சிறந்த அனுபவ ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராட். டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் ஆடிவரும் பிராடிடம், ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில், அவரது தலைமுறையில் யார் சிறந்த ஃபாஸ்ட் பவுலர் என்று கேள்வியெழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ஸ்டூவர்ட் பிராட், என் தலைமுறையில் தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலர் என்றால் அது கண்டிப்பாக டேல் ஸ்டெய்ன்  தான். உண்மையாகவே ஸ்டெய்னின் பவுலிங்கை நான் ரசித்து பார்ப்பேன். அவரது பவுலிங் ஆக்‌ஷன், வேகம், அவர் பேலன்ஸ் செய்யும் விதம், அவரது திறமை என அனைத்துமே அபாரமாகவும் வியப்பாகவும் இருக்கும். ஒருவர் பவுலராக வேண்டும் என்று விரும்பினால், கண்டிப்பாக ஸ்டெய்னை போல திறமையான பவுலராக வேண்டும் என்று ஸ்டெய்னை புகழ்ந்து பேசினார் பிராட்.

தனது சமகால வீரர் ஒருவரை மற்றொரு வீரர் இந்த அளவிற்கு புகழ்ந்து பேசுவது ஆரோக்கியமான விஷயம். அதுதான் ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட். ஸ்டெய்ன் தென்னாப்பிரிக்க அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஸ்டெய்ன் அவரது கெரியரில் அதிகமான காயங்களை சந்தித்தால் இன்னும் கூடுதலான போட்டிகளில் ஆட முடியாமல் போனது.