உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நாளையுடன் உலக கோப்பை தொடர் முடிவடைகிறது. இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

லண்டன் லார்ட்ஸில் நாளை பிற்பகல் 3 மணிக்கு இறுதி போட்டி நடக்கவுள்ளது. இந்திய அணியை போராடி வீழ்த்திய நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியை அசால்ட்டா வீழ்த்திய இங்கிலாந்து அணியும் இறுதி போட்டியில் மோதுகின்றன. 

இரு அணிகளுமே லீக் சுற்றில் வெற்றி தோல்விகளை சந்தித்து ஏற்ற இறக்கங்களுடன் தான் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் சிறப்பாக ஆடி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. இரு அணிகளுமே இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றதில்லை என்பதால் இந்த முறை உலக கோப்பையை இதுவரை தூக்காத அணி தூக்குவது உறுதியாகிவிட்டது. 

இந்நிலையில், இந்த உலக கோப்பையை இங்கிலாந்து அணி தான் வெல்லும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கணித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஸ்டீவ் வாக், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுமே இந்த உலக கோப்பையில் நல்ல கிரிக்கெட்டை ஆடியுள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக அபாரமாக ஆடி வென்றது. அந்த அணியின் பவுலிங் அபாரமாக இருந்தது. அதனால் இறுதி போட்டி கடும் போட்டியாகவே அமையும். இங்கிலாந்து அணி தான் கோப்பையை வெல்லும். ஆனால் அது அந்த அணிக்கு அவ்வளவு எளிதாக இருக்காது என்று ஸ்டீவ் வாக் தெரிவித்தார்.