அனில் கும்ப்ளே, இந்திய அணிக்காக 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்டுகளையும், 271 ஒருநாள் போட்டிகளில் ஆடி 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பவுலர் கும்ப்ளே தான். 1999ல் டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தார்.

ஒரு பவுலராக மட்டுமல்லாது கேப்டனாகவும் இந்திய அணிக்கு அளப்பரிய பங்காற்றியவர் அனில் கும்ப்ளே. நாட்டுக்காக ஆடுவதை தவமாய் நினைத்து தனது கெரியர் முழுவதும் ஆடிய கும்ப்ளே, இந்திய அணிக்கு தேவைப்படும் போதெல்லாம், இக்கட்டான சூழல்களில் எல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தவர்.

இந்நிலையில், அனில் கும்ப்ளேவிற்கு எதிராக நிறைய ஆடிய அனுபவம் கொண்ட ஆஸி., அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான ஸ்டீவ் வாக், கும்ப்ளேவை வெகுவாக புகழ்ந்துள்ளார்.

கும்ப்ளே குறித்து பேசிய ஸ்டீவ் வாக், அனில் கும்ப்ளே அளவுக்கு தனது நாட்டுக்காக ஆடுவதை ரசித்தும் மகிழ்ந்தும் ஆடிய வீரரை நான் பார்த்ததில்லை. நாட்டுக்காக கிரிக்கெட் ஆடுவதுதான் அவருக்கு எல்லாமே. அவரை நாங்கள் ஒரு லெக் ஸ்பின்னராக நினைத்து ஆடியதே இல்லை. குறைந்த வேகத்தில் வீசும் இன்ஸ்விங் பவுலராக கருதியே ஆடுவோம். வேகத்தை மாற்றி வீசுவதிலும், க்ரீஸை பயன்படுத்தி நல்ல வேரியேஷனில் வீசுவதிலும் வல்லவர் அவர். கடும் போட்டியாளரான அனில் கும்ப்ளே, எங்களுக்கு எதிராக சொதப்பலாக பந்துவீசியதே கிடையாது. இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் ராகுல் டிராவிட் தான் கும்ப்ளே என்று ஸ்டீவ் வாக் புகழாரம் சூட்டியுள்ளார்.