ஷேன் வார்னுக்கும் தனக்கும் இடையேயான மோதலுக்கு ஆரம்பப்புள்ளியாக அமைந்த சம்பவம் குறித்து ஸ்டீவ் வாக் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கிற்கும், லெஜண்ட் ஸ்பின்னர்  ஷேன் வார்னுக்கும் இடையேயான மோதல் கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்த விஷயமே. ஸ்டீவ் வாக்கை சுயநல கிரிக்கெட்டர் என்று தொடர்ந்து விமர்சித்துவருகிறார் ஷேன் வார்ன். ஸ்டீவ் வாக்கிற்கு அணி வெற்றி பெற வேண்டும் என்பதெல்லாம் நோக்கம் கிடையாது. அவர் அரைசதம் அடிக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது பிரச்னை. அணியை பற்றி கவலைப்படமாட்டார் என்று ஸ்டீவ் வாக்கை ஷேன் வார்ன் விமர்சிப்பதும், அதற்கு ஸ்டீவ் வாக் பதிலடி கொடுப்பதும் என இருவருக்கும் இடையேயான மோதல் பல்லாண்டுகளாக நீடித்துவருகிறது.

1999 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதல் சில டெஸ்ட் போட்டிகளில் காயம் காரணமாக சரியாக ஆடமுடியாத ஷேன் வார்னை, கடைசி போட்டியில் வலுக்கட்டாயமாக நீக்கினார் ஸ்டீவ் வாக். அந்த சம்பவம் தான் அவர்களுக்கு இடையேயான மோதலுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

இந்நிலையில், ஸ்கை ஸ்போர்ட்ஸில் பேசிய ஸ்டீவ் வாக், அந்த குறிப்பிட்ட தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஷேன் வார்னை அணியிலிருந்து நீக்கியது ஏன் என விளக்கமளித்துள்ளார். 

அதுகுறித்து பேசிய ஸ்டீவ் வாக்,  நமது உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். எல்லாருக்குமே தனித்தனி கருத்து இருக்கும். அந்த போட்டியில் தோற்றிருந்தால், கேப்டனாக என் தலை தான் உருளும். நல்வாய்ப்பாக அந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதால் தொடர் சமனடைந்தது. ஷேன் வார்னை நீக்கியது கடினமானதுதான். ஆனால் அணியின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு அது. அந்த முடிவை இப்போது திரும்பி பார்த்தால் அது நல்ல முடிவுதான் தவறான முடிவல்ல என்றுதான் இப்போதும் தோன்றுகிறது. ஏனெனில் அப்போது ஷேன் வார்ன் சரியாக வீசவில்லை. அதனால் அவரை நீக்கியது அவருக்கு நல்லதுதான் என்கிற ரீதியில் அவர் பார்க்காமல் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார் என்று ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.