ஆஷஸ் தொடரின் முதல் 2 போட்டிகள் முடிவடைந்துள்ளன. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லார்ட்ஸில் நடந்த இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. 

மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் ஆடமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆர்ச்சர் 148 கிமீ வேகத்தில் வீசிய பவுன்ஸர், ஸ்மித்தின் பின் கழுத்தில் அடித்தது. அடி பலமாக விழுந்ததால் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்மித் ஆடவில்லை. அவருக்கு பதிலாக லபுஷேன் களமிறங்கினார். 

அந்த சம்பவத்திற்கு பின் தனது உடல்நிலை குறித்து பேசிய ஸ்மித், தலைவலிப்பதாகவும், கழுத்தில் அடிபட்ட இடத்தில் தொட்டால் வலிப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அவ்வப்போது தலைசுற்றலாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். முழுமையாக ஃபிசியோவின் கண்காணிப்பில் இருந்துவரும் ஸ்மித், மூன்றாவது போட்டியில் ஆடுவது சந்தேகம் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. 

அதேபோலவே மூன்றாவது டெஸ்ட்டுக்கு முன்னதாக அனைத்து வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஸ்மித் மட்டும் பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட்டில் ஸ்மித் ஆடமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மித்துக்கு பதிலாக யார் இறங்குவார் என்பது அறிவிக்கப்படவில்லை. 

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய லபுஷேன், இக்கட்டான சூழலில் சிறப்பாக ஆடி அணியை காப்பாற்றினார். எனவே அவரே அடுத்த போட்டியிலும் ஸ்மித்துக்கு பதிலாக எடுக்கப்பட வாய்ப்புள்ளது.