உலக கோப்பை இன்னும் 4 நாட்களில் தொடங்க உள்ளது. இதற்கிடையே பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. 

நேற்று இரண்டு போட்டிகள் நடந்தன. இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிய போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஸ்மித்தின் அதிரடியான சதத்தால் 50 ஓவர் முடிவில் 297 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியை 285 ரன்களுக்கு சுருட்டி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடையை அனுபவித்த ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் தடை முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். உலக கோப்பையில் இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணியில் பெரிய பங்காற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், நேற்றைய போட்டியில் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகிய இருவர் களமிறங்கும் போதும் ரசிகர்கள், சீட்(ஏமாற்றுக்காரன்) - சீட் என முழக்கமிட்டனர். ஆனால் இதெல்லாம் நடக்கும், இதுபோன்ற சீண்டல்களை எல்லாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற எதார்த்தத்தை புரிந்த ஸ்மித், களத்தில் நிலைத்து நின்று அபாரமாக ஆடி சதமடித்தார். தன் மீதான தாக்குதல்களுக்கு சதமடித்து பதிலடி கொடுத்தார் ஸ்மித். வார்னரும் 43 ரன்கள் அடித்தார். 

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கு ஸ்டீவ் ஸ்மித்தின் இன்னிங்ஸ் மிக முக்கியமானது. ஸ்மித் மற்றும் வார்னரை கஷ்டப்படுத்தும்படி எதுவும் செய்ய வேண்டாம் என்று இங்கிலாந்து வீரர் மொயின் அலி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் மொயின் அலியின் பேச்சை கேட்காத ரசிகர்கள், ஸ்மித்தை விமர்சித்தனர். ஸ்மித்தும் சதத்தின் மூலம் பதிலடி கொடுத்ததோடு ஆஸ்திரேலிய அணி வெற்றியடைய காரணமாக திகழ்ந்தார்.