ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என வென்றது. முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடந்த இரண்டாவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த தொடரில் 120 புள்ளிகளை பெற்ற ஆஸ்திரேலிய அணி, மொத்தமாக 176 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

இந்த போட்டியில், கேப்டன் டிம் பெய்ன் இருக்கும்போது, ஸ்மித் ஃபீல்டிங் செய்ததை கடுமையாக விமர்சித்திருந்தார் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல். பந்தை சேதப்படுத்தியதன் விளைவாக கேப்டன் பொறுப்பை இழந்த ஸ்மித், தடையை அனுபவித்து, தடை முடிந்ததால் தற்போது மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் ஆடிவருகிறார். இந்நிலையில், கேப்டன் டிம் பெய்ன் இருக்கும்போது, அவரை டாமினேட் செய்யும் விதமாக ஸ்மித் ஃபீல்டிங் செட் செய்ததை சேப்பல் விமர்சித்தார்.

ஸ்மித்தை விமர்சித்து பேசிய இயன் சேப்பல், ஸ்மித் ஃபீல்டிங் செட் செய்தது சரியில்லை. பார்க்கவே சகிக்காத செயல் அது. டிம் பெய்னிடம் சென்று ஸ்மித் பேசுகிறார். ஸ்மித் சொன்ன ஆலோசனையை ஏற்க டிம் பெய்ன் தயாராக இருந்ததாக தெரியவில்லை. ஆனாலும் ஸ்மித் ஃபீல்டிங்கில் மாற்றத்தை செய்கிறார். இது கேப்டனை தரம் தாழ்த்தும் செயல் என்று கடுமையாக ஸ்மித்தை விமர்சித்திருந்தார் இயன் சேப்பல்.
 
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த ஸ்மித், என்னால் முடிந்த அளவிற்கு டிம் பெய்னுக்கு களத்தில் உதவவே நினைத்தேன். டிம் பெய்ன் மிகச்சிறப்பாக கேப்டன்சி செய்துவருகிறார். அவருக்கு நான் சில ஆலோசனைகள் மட்டுமே வழங்குவேனே தவிர, அவரை மட்டம்தட்ட நினைக்கவில்லை என்று ஸ்மித் கூறியுள்ளார்.