சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஸ்டீவ் ஸ்மித். விராட் கோலிக்கு நிகரான வீரராக ஸ்மித் திகழ்கிறார். விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து கொண்டிருக்கிறார் ஸ்மித். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் அபாரம். ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை குவித்துவருகிறார் ஸ்மித். 

மரபார்ந்த பேட்டிங் ஸ்டைல் அல்லாத, வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலையும் சிறந்த டெக்னிக்கையும் கொண்ட வீரர் ஸ்மித். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில் 7 இன்னிங்ஸில் 774 ரன்களை குவித்தார் ஸ்மித். ஸ்மித் 73 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 26 சதங்களுடன் 7227 ரன்களை குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 62.84.

சமகாலத்தின் சிறந்த பேட்ஸ்மேனான ஸ்மித், தான் எதிர்கொண்டதிலேயே மிகத்திறமையான பவுலர் யார் என்ற ரசிகரின் கேள்விக்கு பாகிஸ்தானின் முகமது ஆமீர் என்று பதிலளித்துள்ளார். நான் எதிர்கொண்டதிலேயே முகமது ஆமீர் தான் மிகத்திறமையான பவுலர் என்று ஸ்மித் தெரிவித்திருக்கிறார். 

முகமது ஆமீர் பாகிஸ்தான் அணியின் சீனியர் நட்சத்திர பவுலர். அருமையான ஃபாஸ்ட் பவுலரான ஆமீர், 2010ம் ஆண்டு ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் சிக்கி 5 ஆண்டு தடை பெற்றார். 5 ஆண்டு கால தடைக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் அணியில் கம்பேக் கொடுத்து ஆடிவருகிறார். இதுவரை 36 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள முகமது ஆமீர் 119 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 61 ஒருநாள் போட்டிகளில் ஆடி 81 விக்கெட்டுகளையும் 42 டி20 போட்டிகளில் ஆடி 55 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.