இந்தியா ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் அடித்துள்ளது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் மொத்தமாக சேர்த்தே 10 ரன்கள் மட்டுமே அடித்து படுமோசமாக சொதப்பிய ஸ்மித், 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதமடித்தார். 131 ரன்கள் அடித்து ஸ்மித் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித்தின் 27வது சதம் இது. தனது 136வது டெஸ்ட் இன்னிங்ஸில் 27வது சதத்தை அடித்தார் ஸ்மித். 

இதன்மூலம் 27வது சதத்தை வேகமாக அடித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட் கடவுள் டான் பிராட்மேன் 70 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 27வது சதத்தை எட்டினார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் 141 இன்னிங்ஸ்களில் 27 சதங்களை அடித்தனர். ஆனால் ஸ்மித்தோ 136 இன்னிங்ஸ்களிலேயே 27 சதங்களை அடித்துவிட்டார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில், விராட் கோலி அடித்த ரன்களை விட(7318 ரன்கள்) அதிக ரன்களும் அடித்துவிட்டார். ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7368 ரன்களை அடித்துள்ளார்.