மிகச்சிறந்த வீரர் ஒருவரை சிஎஸ்கே அணியில் எடுக்க வேண்டாமென்று தோனி தெரிவித்ததாக சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி சிஎஸ்கே. மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும் அதற்கடுத்து அதிகபட்சமாக சிஎஸ்கே 3 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய 10 ஐபிஎல் சீசன்களில் 8 முறை இறுதி போட்டி வரை சென்று, அதில் 3 முறை கோப்பையை வென்றது. 5 முறை இறுதி போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது. ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி சிஎஸ்கே மட்டுமே. 

சிஎஸ்கே அணியின் ஆதிக்கத்துக்கும் வெற்றிகரமான அணியாக கெத்தாக நடைபோடுவதற்கும் தோனியின் கேப்டன்சி முக்கியமான காரணம். சிஎஸ்கே அணியின் வீரர்களை தேர்வு செய்வது தொடங்கி, அணி சார்ந்த அனைத்து விஷயங்களிலும் தோனி நினைத்ததை செய்யுமளவிற்கு அவருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. எனவே தான் நினைப்பதை தோனியால் சுதந்திரமாக செயல்படுத்த முடியும். இது ஒரு கேப்டனாக அவருக்கு மிகப்பெரிய பலம். 

சிஎஸ்கே அணியின் கோர் டீம் வலுவாக இருப்பதால், ஒவ்வொரு சீசனிலும் தங்கள் அணிக்கு தேவையான குறிப்பிட்ட சில வீரர்களை மட்டுமே சிஎஸ்கே அணி தேர்வு செய்யுமே தவிர, ஏலத்தில் பரபரப்பெல்லாம் இல்லாமல் சிஎஸ்கே அணி நிர்வாகம் நிதானமாகவே இருக்கும். தங்கள் அணிக்கு என்ன தேவை, யார் தேவை என்பதில் மிக உறுதியாக இருக்கும் தோனியும் அந்த அணியும், வீரர்கள் தேர்வில் மிகச்சிறப்பாக செயல்படுவதுதான் அந்த அணியின் வெற்றிக்கு காரணம். தோனி சிஎஸ்கே அணியில் நினைத்ததை செய்யமுடிவதால் தான், அவரால் அந்த அணியை வெற்றிகரமான அணியாக கட்டிக்காக்க முடிகிறது. 

அந்தவகையில், தோனி அவரது திட்டத்திலும் தேவையிலும் மிகத்தெளிவாக இருப்பவர் என்பதையும் அணியின் சூழல் எந்தவிதத்திலும் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக அதற்கேற்ப வீரர்கள் தேர்விலும் கவனம் செலுத்துபவர் என்பதையும் பறைசாற்றும் விதமாக சிஎஸ்கே உரிமையாளர் ஸ்ரீநிவாசன் ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஸ்ரீநிவாசன், மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் பெயரை சொல்லி, அவரை அணியில் எடுக்கலாம் என்று தோனியிடம் சொன்னேன். அதற்கு, ”வேண்டாம் சார்.. அணியின் சூழலை கெடுத்துவிடுவார்” என்று சொல்லி அந்த வீரரை எடுக்க வேண்டாம் என்று உறுதியாக தெரிவித்தார் தோனி. அதனால் அந்த வீரரை எடுக்கவில்லை. அணியின் ஒற்றுமையும் நல்ல சூழலும் மிக முக்கியம். 10-12 பேரை ஒருங்கிணைத்து நல்ல சூழலை உருவாக்கி, பராமரிப்பது என்பது எளிதான  காரியம் அல்ல என்று ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.