இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் விராட் கோலி ஆடாததால், ரஹானே தான் கேப்டன்சி செய்கிறார்.

கோலியை போல ரஹானே களத்தில் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டுபவர் இல்லை என்றாலும், மிகச்சிறந்த கேப்டன். அவரது கேப்டன்சியில் இந்திய அணி ஆடிய 2 டெஸ்ட் போட்டிகளிலுமே வெற்றி பெற்றிருக்கிறது. கோலி மாதிரி வெளிப்படையாக ஆக்ரோஷத்தை காட்டவில்லை என்றாலும், எதிரணிக்கு களத்திலும் சரி, களத்திற்கு வெளியேயும் சரி, தக்க பதிலடி கொடுப்பதில் வல்லவர் தான் ரஹானே.

அமைதியாக இருப்பவர்கள், ஆக்ரோஷமானவர்கள் இல்லை என்று அர்த்தமல்ல என ரஹானே குறித்து சச்சின் டெண்டுல்கர் கூட கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஹானேவின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இந்திய அணியின் புதிய தலைவர்(கேப்டன்) ரஹானே, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஏற்கனவே தான் யார் என்பதை நிரூபித்த கேப்டன். டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல ரெக்கார்டு வைத்துள்ளார். தனிப்பட்ட முறையிலும் ரஹானே மிகவும் அமைதியானவர்,  நிதானமானவர். அவரது சாந்தமான கேரக்டர், வீரர்களுக்கும் உதவும். விராட் கோலி ஆக்ரோஷத்தை வெளிக்காட்டுபவர். கேப்டன்சி மாற்றம், இந்திய அணியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.  ரஹானேவின் புதிய ஐடியாக்கள், இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.