உலக கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 352 ரன்களை குவித்தது. 353 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை 316 ரன்களுக்கு சுருட்டி 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் தவான் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 127 ரன்களை குவித்தனர். ரோஹித் அரைசதம் அடித்து அவுட்டாக, தவானும் கோலியும் இணைந்து சிறப்பாக ஆடினர்.

தவான் அதிரடியாக ஆட, கோலி அவருக்கு சிங்கிள் தட்டி கொடுத்தார். அபாரமாக ஆடி சதமடித்த தவான், 117 ரன்களில் ஆட்டமிழந்தார். 37வது ஓவரில் தவான் ஆட்டமிழந்ததால், நான்காம் வரிசையில் ஹர்திக் பாண்டியா இறக்கப்பட்டார். களமிறங்கிய முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார் பாண்டியா. ஆனால் கீப்பர் அலெக்ஸ் கேரி அந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய பாண்டியா, அதன்பின்னர் அடித்து ஆடி 27 பந்துகளில் 48 ரன்களை குவித்தார். கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி 114 ரன்களை குவித்தது. அதற்கு முக்கிய காரணம் சரியான நேரத்தில் அதிரடியை தொடங்கிவைத்து 48 ரன்களை குவித்த பாண்டியா தான். 

பாண்டியாவின் கேட்ச்சை பிடித்து அவரை முதல் பந்திலேயே அவுட்டாக்கியிருந்தால், இந்திய அணியின் ஸ்கோர் 352 ரன்கள் என்ற நிலையை எட்டியிருக்காது. 330க்கு குறைவாகத்தான் இருந்திருக்கும். 

இந்நிலையில், இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீகாந்த், ஹர்திக் பாண்டியாவின் அதிரடி பேட்டிங் தான் ஆட்டத்தை தலைகீழாக மாற்றியதாக தெரிவித்துள்ளார்.