இலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸின் கார் மோதி முதியவர் பலியானதையடுத்து, குசால் மெண்டிஸை போலீஸார் கைது செய்துள்ளனர்.

2015ம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகமான குசால் மெண்டிஸ், இலங்கை அணிக்காக 44 டெஸ்ட், 76 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். வலது கை பேட்ஸ்மேனான குசால் மெண்டிஸ், இலங்கை அணியின் நட்சத்திர வீரராக திகழ்கிறார். 

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் வீரர்கள் வீட்டில் முடங்கியிருந்த நிலையில், இலங்கையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சி முகாம் புதன்கிழமை முடிந்ததால், அதில் கலந்துகொண்டு திரும்பினார் குசால் மெண்டிஸ். 

இந்நிலையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 5-5.30 மணியளவில் கொழும்பின் புறநகர்ப்பகுதியில் காரில் சென்றுள்ளார் குசால் மெண்டிஸ். குசால் மெண்டிஸ் காரை வேகமாக ஓட்டியதாக தெரிகிறது. அப்போது, சைக்கிளில் சென்ற 64 வயது முதியவர் மீது மோதியதில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதையடுத்து குசால் மெண்டிஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர். மெண்டிஸை நாளை அல்லது நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கைதாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.