இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 135 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை வீரர்கள் திரிமன்னே, குசால் பெரேரா, டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், மேத்யூஸ், சண்டிமால் என யாருமே சரியாக ஆடாததால் சொற்ப ரன்களுக்கு சுருண்டது இலங்கை அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் கேப்டனும் சமகாலத்தின் சிறந்த வீரர்களில் ஒருவருமான ஜோ ரூட், நீண்ட இடைவெளிக்கு பிறகு மிகச்சிறப்பாக ஆடி இரட்டை சதம் விளாசினார். அபாரமாக ஆடி 228 ரன்களை குவித்தார் ஜோ ரூட். அவருக்கு உறுதுணையாக பட்லர்(73) மற்றும் பேர்ஸ்டோ(47) ஆகிய இருவரும் ஓரளவிற்கு நன்றாக ஆடினர். ரூட்டின் பொறுப்பான பேட்டிங்கால், முதல் இன்னிங்ஸில் 421 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.

286 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இலங்கை அணி, முதல் இன்னிங்ஸை போல் இல்லாமல், 2வது இன்னிங்ஸில் சுதாரிப்பாக பேட்டிங் ஆடிவருகிறது. முதல் இன்னிங்ஸில் வெறும் 135 ரன்களுக்கே சுருண்ட இலங்கை அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்துள்ளது. இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் திரிமன்னே மற்றும் குசால் பெரேரா ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். 

குசால் பெரேரா 62 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய குசால் மெண்டிஸ் வெறும் பதினைந்து ரன்களுக்கு நடையை கட்டினார். மற்றொரு தொடக்க வீரரான திரிமன்னேவுடன் நைட் வாட்ச்மேனாக எம்பல்டேனியா ஜோடி சேர்ந்த நிலையில், 3ம் நாள் ஆட்டம் முடிந்தது. திரிமன்னே 76 ரன்களுடன் களத்தில் உள்ளார்.