இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட நேர விவரத்தை பார்ப்போம். 

ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் ஒருநாள் போட்டிகளும், அதைத்தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வரும் 13ம் தேதி முதல் இந்த தொடர் தொடங்கவிருந்தது. 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடக்கவிருந்த நிலையில், இலங்கை அணியில் அடுத்தடுத்து 2 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியது. அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக ஆடவுள்ள நிலையில், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் க்ராண்ட் ஃப்ளவருக்கு கொரோனா உறுதியானது. அவரைத்தொடர்ந்து, அந்த அணியின் தரவு பகுப்பாய்வாளர்(Data Analyst) ஜி.டி.நிரோஷனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்த நாட்களில் கொரோனா உறுதியானதையடுத்து, குவாரண்டினை நீட்டித்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், வீரர்களை 2 குழுவாக பிரித்து 2 வெவ்வேறு நகரங்களில் தங்கவைத்துள்ளது.

எனவே ஜூலை 13ம் தேதி தொடங்கவிருந்த கிரிக்கெட் தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கவிருக்கிறது. அதன்படி, ஜூலை 18, 20, 23 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும், ஜூலை 25, 27, 29ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.

தேதி மாற்றப்பட்டது மட்டுமல்லாது போட்டி தொடங்கும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கவிருந்த ஒருநாள் போட்டிகள் பிற்பகல் 3 மணிக்கும், இரவு 7 மணிக்கு தொடங்குவதாக இருந்த டி20 போட்டிகள் இரவு 8 மணிக்கும் தொடங்கவுள்ளன. இந்த அனைத்து போட்டிகளுமே கொழும்புவில் நடக்கின்றன.