இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடிவருகிறது. 

முதல் போட்டியில் 108 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று தொடரை 2-0 என ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இலங்கையை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் டிக்வெல்லா முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். அந்த அணியின் விக்கெட் கீப்பர் குசால் பெரேராவை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. பெரேரா மட்டும் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். 45 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அவர் அவுட்டாக, அதன்பின்னர் ஸ்கோர் ஏறவே இல்லை. பெரேரா 17வது ஓவரில் முதல் பந்தில் அவுட்டாக, அதன்பின்னர் எஞ்சியிருந்த  23 பந்துகளில் வெறும் 32 ரன்களை மட்டுமே இலங்கை அணி அடித்தது. 

20 ஓவரில் 142 ரன்களை மட்டுமே இலங்கை அணி அடித்தது. ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலர்களான மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் கேன் ரிச்சர்ட்ஸன் ஆகிய மூவருமே அபாரமாக பந்துவீசி, ஸ்கோரை கட்டுப்படுத்தியதுடன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு இது எளிதான இலக்கு.