கொரோனாவால் ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஐபிஎல்லை தங்கள் நாட்டில் நடத்த தயாராக இருப்பதாக அண்டை நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் கிரிக்கெட் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள் உட்பட அனைத்துவிதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய மற்றும் பணக்கார டி20 லீக் தொடரான ஐபிஎல் தொடர், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிலைமை முழுவதுமாக கட்டுக்குள் வந்தபின்னர், அரசின் அனுமதியுடன் தான் ஐபிஎல் நடத்தப்படும். எப்படியும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் நடத்தமுடியாத பட்சத்தில், இலங்கையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துதருவதாகவும் இலங்கையில் நடத்துமாறும் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா பரிந்துரைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் சில்வா, ஐபிஎல்லை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், பிசிசிஐ-க்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படும். எனவே இந்தியாவில் நடத்த முடியாத சூழல் இருந்தால், 2009ல் ஐபிஎல் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டதை போல வெளிநாட்டில் நடத்தினால் அது பிசிசிஐக்கு பலனளிக்கும். இலங்கையில் நடத்துவது குறித்து பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளோம். அனுமதியளிக்கும்பட்சத்தில், இலங்கையில் அனைத்துவிதமான வசதிகளையும் ஏற்படுத்தி இலங்கை சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் ஐபிஎல்லை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தயாராக இருப்பதாக சில்வா தெரிவித்துள்ளார்.
