Asianet News TamilAsianet News Tamil

#SLvsIND 2வது டி20: சிறிய ஸ்கோரை வச்சுகிட்டு கடைசி வரை கடுமையாக போராடிய இந்தியா..! இலங்கை த்ரில் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று, தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
 

sri lanka beat india in second t20
Author
Colombo, First Published Jul 29, 2021, 9:07 AM IST

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த 27ம் தேதி நடப்பதாக இருந்த 2வது டி20 போட்டி, க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா உறுதியானதால் நேற்று(28ம் தேதி) நடந்தது.

க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவருடன் தொடர்பில் இருந்த வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்தவகையில், 2வது போட்டியில் பிரித்வி ஷா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் ஆடவில்லை.

அதனால் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா, சேத்தன் சக்காரியா ஆகிய வீரர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றனர். இந்திய அணி இருக்கிற வீரர்களை வைத்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், அணி காம்பினேஷன் வலுவானதாகவெல்லாம் இல்லை. 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் ஆடியது.

இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ராகுல் சாஹர், சேத்தன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில்  அதிகபட்சமாக கேப்டன் தவான் 40 ரன்கள் அடித்தார். தேவ்தத் படிக்கல் 29 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 21 ரன்களும் அடித்தனர். சஞ்சு சாம்சன்(7) மற்றும் நிதிஷ் ராணா(9) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். புவனேஷ்வர் குமார் 13 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் இந்திய அணி வெறும் 132 ரன்கள் மட்டுமே அடித்தது.

133 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இலங்கை அணியை இந்திய பவுலர்கள் எளிதாக ரன் அடிக்க அனுமதிக்கவில்லை. தொடக்கம் முதலே மிகவும் டைட்டாக வீசி ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர். தொடக்க வீரர் மினோத் பானுகா சிறப்பாக ஆடி 36 ரன்கள் அடித்தார். அவிஷ்கா ஃபெர்னாண்டோ(11), சமரவிக்ரமா(8), தசுன் ஷனாகா(3), ஹசரங்கா(15) ஆகியோர் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆனால் தனஞ்செயா டி சில்வா பொறுப்புடன் ஆடி இலக்கை நோக்கி இலங்கை அணியை அழைத்து சென்றார். 18 ஓவரில் இலங்கை அணி 113 ரன்கள் அடிக்க, கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில், புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரின் 3வது பந்தில் சாமிகா கருணரத்னே ஒரு சிக்ஸர் அடிக்க, அந்த ஓவரில் இலங்கைக்கு 12 ரன்கள் கிடைத்தது. எனவே கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட, கடைசி ஓவரின் 4வது பந்தில் இலக்கை எட்டி இலங்கை த்ரில் வெற்றி பெற்றது.

வெறும் 132 ரன்கள் அடித்த இந்திய அணி, பவுலர்களின் சிறப்பான செயல்பாட்டால் கடைசிவரை கடுமையாக போராடியது. ஆனாலும் இலக்கு மிக எளிதானது என்பதால், தனஞ்செயா டி சில்வாவின்(40) பொறுப்பான பேட்டிங்கால் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து டி20 தொடர் 1-1 என சமனடைந்தது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios