வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 

கொழும்பில் நடந்த முதல் போட்டியில் இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியில் சீனியர் வீரரும் விக்கெட் கீப்பருமான முஷ்ஃபிகுர் ரஹீமைத் தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. 

தமீம் இக்பால், சௌமியா சர்க்கார் மற்றும் மிதுன் ஆகிய மூவரும் 52 ரன்களுக்கு உள்ளாகவே ஆட்டமிழந்துவிட்டனர். அதன்பின்னர் முஷ்ஃபிகுர் ரஹீம் ஒரு முனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் மஹ்மதுல்லா, சபீர் ரஹ்மான் மற்றும் மொசாடெக் ஹுசைன் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தனர். அதனால் பார்ட்னர்ஷிப்பே அமையவில்லை. 

அதன்பின்னர் களத்திற்கு வந்த மெஹிடி ஹாசன், ரஹீமுடன் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். பொறுப்புடன் ஆடிய மெஹிடி ஹாசன் 43 ரன்களில் ஆட்டமிழக்க, 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 238 ரன்கள் அடித்தது. முஷ்ஃபிகுர் ரஹீம் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் அடித்திருந்தார். 

239 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கருணரத்னே 15 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மற்றொரு தொடக்க வீரரான ஃபெர்னாண்டோ அபாரமாக ஆடி 82 ரன்களை குவித்தார். குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் ஆகியோரும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்தனர். மேத்யூஸ் அரைசதம் அடிக்க, 45வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஃபெர்னாண்டோ தேர்வு செய்யப்பட்டார்.