2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் அடித்துள்ளது. 

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக பெங்களூருவில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால் (4) மற்றும் ரோஹித் சர்மா (15) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹனுமா விஹாரி 31 ரன்னிலும், விராட் கோலி 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஜடேஜா(4), அஷ்வின் (13), அக்ஸர் படேல் (9), ஷமி (5) என ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 98 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்த ஷ்ரேயாஸ் ஐயர் 8 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, இந்திய ஸ்பின்னர்களிடம் தான் சரணடையும் என பார்த்தால், ஃபாஸ்ட் பவுலர்களிடம் விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை ஸ்பின்னர்கள் பந்துவீசும்போது பெரியளவில் தாக்கம் இருந்தது. எனவே இந்திய ஸ்பின்னர்களிடம் இலங்கை வீரர்கள் வீழ்ந்துவிடுவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பும்ராவும் ஷமியும் சேர்ந்து அசத்திவிட்டனர். 3வது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரர் குசால் மெண்டிஸை 2 ரன்னிலும், 5வது ஓவரின் முதல் பந்தில் திரிமன்னேவை 8 ரன்னிலும் வீழ்த்தினார் பும்ரா.

ஆறாவது ஓவரில் கேப்டனும் மற்றொரு தொடக்க வீரருமான கருணரத்னேவை 4 ரன்னில் ஷமி வெளியேற்றினார். தனஞ்செயா டி சில்வாவையும் 10 ரன்னில் ஷமியே வீழ்த்தினார். அசலங்காவை 5 ரன்னில் அக்ஸர் படேல் வீழ்த்த, மறுமுனையில் அடித்து ஆடி 43 ரன்களை விளாசிய சீனியர் வீரர் ஆஞ்சலோ மேத்யூஸை 43 ரன்னில் பும்ரா வீழ்த்தினார்.

85 ரன்களுக்கே இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் அடித்துள்ளது.