ஆஸ்திரேலியா - இலங்கை இடையேயான இரண்டாவது டி20 போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் எந்த பேட்ஸ்மேனும் நிலைத்து நின்று பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் அந்த அணி 117 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட்டானது.

இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குணதிலகாவும் குசால் மெண்டிஸும் இறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே, ரன் ஓடும்போது சரியான புரிதல் இல்லாததால் குசால் மெண்டிஸ் ரன் அவுட்டானார். குசால் மெண்டிஸ் ஒரு ரன்னில் வெளியேற, நன்றாக ஆடிக்கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரரான குணதிலகா 21 ரன்னில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 17 ரன்களிலும் டிக்வெல்லா 5 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 27 ரன்கள் அடித்த பெரேராவை அஷ்டன் அகார் போல்டாக்கி அனுப்பினார். அதன்பின்னர் ஷனாகா, ஹசரங்கா, உடானா, மலிங்கா, சந்தாகான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 19 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை அணி. 

ஆஸ்திரேலிய அணிக்கு 118 ரன்கள் என்பது மிக மிக எளிய இலக்கு. அதை அந்த அணி எளிதாக அடித்துவிடும்.