இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஸ்ரீசாந்த். கங்குலி தலைமையிலான இந்திய அணியில் 2005ம் ஆண்டில் அறிமுகமானார். சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் என்றாலும் கூட, அருமையான ஃபாஸ்ட் பவுலர்.

2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய இரண்டு உலக கோப்பைகளையும் வென்ற தோனியின் தலைமையிலான இந்திய அணியில் முக்கிய அங்கம் வகித்தவர் ஸ்ரீசாந்த். நல்ல வேகமத்துடன் ஸ்விங் செய்யக்கூடியவர் ஸ்ரீசாந்த். இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளிலும் 53 ஒருநாள் போட்டிகளிலும் 10 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார் ஸ்ரீசாந்த். ஆடியது குறைவான போட்டிகளே என்றாலும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்ததுடன், இந்திய கிரிக்கெட்டில் அழிக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார் என்றே கூற வேண்டும்.

சிறந்த ஃபாஸ்ட் பவுலராக திகழ்ந்த அவர், தொடர்ச்சியாக ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி கொண்டிருந்த நிலையில் உச்சபட்சமாக, ஐபிஎல்லில் சூதாட்டப்புகாரில் சிக்கி, இடைக்கால தடை பெற்றார். அதனால் கடந்த சில ஆண்டுகளாக எந்தவிதமான போட்டிகளிலும் ஸ்ரீசாந்த் ஆடவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் அவர் மீதான சூதாட்டப்புகார் நிரூபனமாகாததால் அதிலிருந்து விடுவிக்கப்பட்டார். எனவே மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் முனைப்பிலும் நம்பிக்கையும் உள்ள ஸ்ரீசாந்த், ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சூழலில் ”ஹெலோ ஆப்”பில் லைவ் உரையாடலில் கலந்துகொண்டு பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். 

கொரோனாவால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட, இந்தியா - பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்தலாம் என்ற அக்தரின் கருத்து குறித்து பேசிய ஸ்ரீசாந்த், இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது நல்ல உறவு இல்லை. எனவே இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் முன்னேற்றம் இல்லாமல் இரு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரை நடத்துவது சரியாக இருக்காது என்பது என் கருத்து. அதுமட்டுமல்லாமல் இப்போதைக்கு நாட்டு மக்களின் உடல்நலம் தான் முக்கியம் என்றார்.

தான் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு முன்னாள் கேப்டன் கங்குலி  முக்கியமான காரணம் என்று தெரிவித்த ஸ்ரீசாந்த், 2011 உலக கோப்பை ஃபைனல் குறித்தும் பேசினார். இலங்கைக்கு எதிரான ஃபைனல் மேட்ச்சுக்கு முன் தான் மிகவும் பதற்றமாக இருந்ததாகவும் சச்சினும் யுவராஜும் தனக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள் அனைவரும் 2011 உலக கோப்பையை சச்சினுக்காக வெல்ல நினைத்தனர். அதேபோலவே வென்றும் விட்டோம். அது சிறந்த அனுபவமாக அமைந்தது. ஆனால் அதுவே எனது கடைசி ஒருநாள் போட்டியாக அமையும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நான் இப்போது தீவிர பயிற்சி செய்துவருகிறேன். மீண்டும் அணியில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கையுள்ளது என்றார்.

சமகால கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்றும் சிறந்த பவுலர் பும்ரா என்றும் தெரிவித்த ஸ்ரீசாந்த், தான் பிரயன் லாராவின் தீவிர ரசிகன் என்றும், ஹைடன் பேட்டிங்கும் தனக்கு மிகவும் என்றும் தெரிவித்தார்.