விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகிய நால்வரும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர். இவர்களில் கோலி - ஸ்மித் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. 

கோலி - ஸ்மித் ஆகிய இருவரில் யார் பெஸ்ட் என்ற ஒப்பீடு தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கிறது. சமகாலத்தின் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்வதால் இந்த ஒப்பீடு தவிர்க்கமுடியாதது.

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சாதனைகளை படைத்துவருகிறார். 

விராட் கோலி மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடுகிறார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது பேட்டிங் திறனை வளர்த்துக்கொண்டு தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று அனைவராலும் பாராட்டப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளார். ஸ்மித் மரபாந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடமாட்டார்; முற்றிலும் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர்.

ஆனாலும் இருவருமே, ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களின் நேர்காணலில் முன்வைக்கப்படும் பொதுவான கேள்வி, கோலி - ஸ்மித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பதுதான். 

அதே கேள்வி, கிரிக்ட்ரேக்கர் என்ற ஆங்கில கிரிக்கெட் இணையதளத்தில் பேசிய ஸ்ரீசாந்த்திடமும் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ரீசாந்த், எனது கம்பேக்கிற்காக காத்திருக்கிறேன். நான் களத்தில் இறங்கி ஸ்மித்தின் மிடில் ஸ்டம்ப்பை கழட்டி எறிந்துவிட்டு, நன்றி ஸ்மித் என்று சொல்லும் தருணத்திற்காகவும் வாய்ப்புக்காகவும் காத்திருக்கிறேன்.

கண்டிப்பாக விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன். விராட் கோலி கடின உழைப்பு மற்றும் பணி நெறிகளுக்கு நான் மதிப்பளிக்கிறேன். ஸ்மித்தும் கடுமையான உழைப்பாளி; சிறந்த வீரர் தான். ஆனால் கோலி வேற லெவல். 2013லிருந்து இப்போது வரை அணியை தனது தோள்களில் சுமக்கிறார். நம்பர் 1 வீரராக இவ்வளவு காலம் நீடிப்பதெல்லாம் பெரிய விஷயம். அவருடன் யாரையுமே ஒப்பிட முடியாது என்று ஸ்ரீசாந்த் தெரிவித்தார். 

சூதாட்டப்புகாரில் சிக்கி தடையில் இருந்த ஸ்ரீசாந்த்தின் மீதான தடை, வரும் செப்டம்பரில் முடியவுள்ளது. எனவே அதன்பின்னர் மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்கும் கனவில் உள்ளார் ஸ்ரீசாந்த்.