உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

தென்னாப்பிரிக்க அணிக்கு இது மூன்றாவது போட்டி. இதற்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக ஆடிய 2 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது. முதல் 2 போட்டிகளிலும் தோற்று படுமோசமாக உலக கோப்பை தொடரை தொடங்கியுள்ள தென்னாப்பிரிக்க அணி, முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இந்திய அணியை இன்று எதிர்கொள்கிறது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணியை வீழ்த்துவது தென்னாப்பிரிக்க அணிக்கு எளிதான காரியம் அல்ல. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவான அணியாக திகழும் அதேவேளையில் தென்னாப்பிரிக்க அணி வலுவிழந்துள்ளது. காயம் காரணமாக அனுபவ ஃபாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெய்ன் தொடரிலிருந்து விலகியுள்ளார். இங்கிடி காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. பவுலிங் தான் தென்னாப்பிரிக்க அணியின் பெரிய பலமாக இருந்த நிலையில், ஸ்டெய்னும் இங்கிடியும் இல்லாதது அந்த அணிக்கு பெரிய இழப்பு. 

ஸ்டெய்னும் இங்கிடியும் இல்லாத அதேவேளையில், ஆம்லா இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆடுவார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஆர்ச்சரின் பந்தில் ஹெல்மெட்டில் அடி வாங்கியதால், பாதியில் களத்திலிருந்து வெளியேறிய ஆம்லா, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் ஆட உள்ளார். 

இங்கிடிக்கு பதிலாக ப்ரீடோரியஸ் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஆம்லா அணிக்கு திரும்புவதால் மில்லர் அணியில் இருக்கமாட்டார். 

உத்தேச தென்னாப்பிரிக்க அணி:

ஹாஷிம் ஆம்லா, டி காக்(விக்கெட் கீப்பர்), மார்க்ரம், டுபிளெசிஸ், வாண்டெர் டசன், டுமினி, ஃபெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ப்ரிடோரியஸ், ரபாடா, இம்ரான் தாஹிர்.