உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பை தென்னாப்பிரிக்க அணிக்கு படுமோசமாக அமைந்துவிட்டது. 

தென்னாப்பிரிக்க அணி, இந்த உலக கோப்பையில் இதுவரை 7 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணியை மட்டுமே தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. மற்றபடி அந்த அணி மோதிய போட்டிகளில் இங்கிலாந்து, வங்கதேசம், இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகளிடம் தோல்வியை தழுவியது. 

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் தோற்றதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதியாக இழந்தது தென்னாப்பிரிக்க அணி. உலக கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்க அணி, லீக் சுற்றிலேயே வெளியேறுவது இதுதான் இரண்டாவது முறை. 

சொந்த மண்ணில் நடந்த 2003 உலக கோப்பையில் குரூப் சுற்றுடன் வெளியேறியது தென்னாப்பிரிக்கா. அதன்பின்னர் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த உலக கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறுகிறது. 1992, 1999, 2007, 2015 ஆகிய உலக கோப்பைகளில் அரையிறுதி வரை சென்று தோற்றது தென்னாப்பிரிக்கா. 1996, 2011 ஆகிய உலக கோப்பைகளில் காலிறுதியுடன் வெளியேறியது.