இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம்(3ம் தேதி) ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்கி நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக அன்ரிக் நோர்க்யா ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் மார்க்ரம் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் டீன் எல்கருடன் வாண்டெர்டசன் ஜோடி சேர்ந்தார். எல்கர் மற்றும் வாண்டெர்டசன் ஆகிய இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினர். அபாரமாக ஆடிய எல்கர் சதமடித்தார்; வாண்டெர்டசன் அரைசதம் அடித்தார். சதமடித்த எல்கர் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 184 ரன்களை குவித்தனர். எல்கரை தொடர்ந்து வாண்டர்டசனும் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் டுப்ளெசிஸ், டி காக், டெம்பா பவுமா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 218வது ரன்னில் 2வது விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்க அணி, 302 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விஷ்வா ஃபெர்னாண்டோ அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

145 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியில் கேப்டன் கருணரத்னே மட்டுமே பொறுப்புடன் ஆடி சதமடித்தார். குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், திரிமன்னே, டிக்வெல்லா, பானுகா, ஷனாகா என அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், 2வது இன்னிங்ஸில் 211 ரன்களுக்கு சுருண்டது இலங்கை அணி.

தென்னாப்பிரிக்காவை விட இலங்கை வெறும் 66 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்ததால், 67 ரன்கள் என்ற மிக எளிய வெற்றி இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணி, விக்கெட் இழப்பின்றி அதை அடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கையை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது தென்னாப்பிரிக்க அணி.