ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆடியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்து 3-0 என தென்னாப்பிரிக்கா வென்றது. 

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி தொடரை வென்ற நிலையில் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, லபுஷேனின் பொறுப்பான சதத்தால் 50 ஓவரில் 254 ரன்கள் அடித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் வார்னர் வெறும் 4 ரன்னில் நோர்ட்ஜேவின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஸ்மித்துடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைப்பதற்காக, அவசரப்படாமல் மிகவும் நிதானமாக ஆடிய ஃபின்ச், தனது வழக்கமான இன்னிங்ஸுக்கு மாறாக மிகவும் மெதுவாக ஆடினார். ஆனால் அவர் களத்தில் நீண்டநேரம் நிலைக்கவில்லை. 48 பந்தில் 22 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஸ்மித்தும் 20 ரன்களில் ஆட்டமிழக்க, பொறுப்பு லபுஷேனின் மீது இறங்கியது. 

லபுஷேன் ஒருமுனையில் சிறப்பாக ஆட, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஷார்ட்டும் நன்றாக ஆடினார். இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 81 ரன்களை சேர்த்தனர். ஷார்ட் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் லபுஷேனுடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷும் சிறப்பாக ஆடினார். 32 ரன்களுக்கு மார்ஷும் ஆட்டமிழந்தார். கேரியும் சோபிக்கவில்லை. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மறுமுனையில் தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்திய லபுஷேன், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்தார். ஜெய் ரிச்சர்ட்ஸன் தன் பங்கிற்கு 24 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 254 ரன்கள் அடித்துள்ளது. 108 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 108 ரன்களை குவித்த லபுஷேன், கடைசி ஓவரின் 5வது பந்தில் ஆட்டமிழந்தார். லபுஷேனின் பொறுப்பான பேட்டிங்கால் ஆஸ்திரேலிய அணி ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை அடித்தது. 

255 ரன்கள் என்ற கடினமில்லாத இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் மாலனும் குயிண்டன் டி காக்கும் முறையே 23 மற்றும் 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஸ்மட்ஸ் - வெரெய்ன் ஜோடி சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 

ஸ்மட்ஸும் வெரெய்னும் இணைந்து முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவருமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 96 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த வெரெய்ன், சரியாக 50 ரன்களில் ஸாம்பாவின் பந்தில் ஆட்டமிழந்தார். 

Also Read - சேவாக் அதிரடி அரைசதம்.. வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸை வீழ்த்தி இந்தியா லெஜண்ட்ஸ் அபார வெற்றி

இதையடுத்து ஸ்மட்ஸுடன் ஜோடி சேர்ந்த கிளாசனும் சிறப்பாக ஆடினார். ஸ்மட்ஸ் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் கிளாசனும் அபாரமாக ஆடி அரைசதமடித்ததால், தென்னாப்பிரிக்க அணி 46வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. கிளாசன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் அடித்திருந்தார். 

Also Read - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியில் 2 வீரர்கள் சர்ப்ரைஸ் தேர்வு..?

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்மட்ஸும் தொடர் நாயகனாக கிளாசனும் தேர்வு செய்யப்பட்டனர்.

Also Read - நான் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடமாட்டேன்.. ஐபிஎல்லில் இருந்து அதிரடியாக விலகிய இங்கிலாந்து வீரர்