சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய 5 நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கலந்துகொண்டு டி20 கிரிக்கெட் தொடரில் ஆடுகின்றனர். 

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் அணியும் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியில் சந்தர்பால் மட்டுமே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 

அவரை தவிர வேறு யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. லெஜண்ட் பேட்ஸ்மேன் பிரயன் லாராவை ஜாகீர் கான் 17 ரன்களில் வீழ்த்தினார். தொடக்க வீரராக இறங்கிய டேரன் கங்கா 32 ரன்கள் அடித்தார். கார்ல் ஹூப்பர் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரராக இறங்கிய சந்தர்பால் 41 பந்தில் 61 ரன்கள் அடித்தார். அவரது அதிரடி அரைசதத்தால் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணி 20 ஓவரில் 150 ரன்கள் அடித்தது. 

151 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய இந்தியா லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பல ஆண்டுகளுக்கு பின் சச்சின் டெண்டுல்கரும் சேவாக்கும் தொடக்க வீரர்களாக இறங்கினார். இந்த ஜோடியின் ஆட்டத்தை பார்த்து நீண்ட காலம் ஆகியிருந்த நிலையில், மீண்டும் அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு காண கிடைத்த வரப்பிரசாதம். 

சேவாக் ஆடிய காலத்தில் ஆடியதை போன்றே, இப்போதும் ஆடினார். முதல் பந்திலேயே பவுண்டரி அடிப்பதில் வல்லவரான சேவாக், இந்த இன்னிங்ஸிலும் முதல் பந்தையே பவுண்டரி அடித்தார். அவர்கள் ஆடிய காலத்தில் எப்படி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்களோ, நீண்ட இடைவெளிக்கு பிறகும் இருவரும் அபாரமாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கே சச்சினும் சேவாக்கும் இணைந்து 83 ரன்களை அடித்துவிட்டனர். சச்சின் டெண்டுல்கர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Also Read - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியில் 2 வீரர்கள் சர்ப்ரைஸ் தேர்வு..?

அதன்பின்னர் கைஃப் 16 ரன்களிலும் மன்ப்ரீத் கோனி டன் அவுட்டும் ஆகி வெளியேறினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அடித்து ஆடி அரைசதம் அடித்த சேவாக், கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணி இலக்கை எட்ட உதவினார். சேவாக்கும் யுவராஜும் சேர்ந்து போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தனர். சேவாக் 57 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 74 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இதையடுத்து 19வது ஓவரின் இரண்டாவது பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது இந்தியா லெஜண்ட்ஸ் அணி. சேவாக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.