இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு முன்பாக, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

அதுவும் அந்த இரண்டு வெற்றிகளும் சாதாரண வெற்றிகள் இல்லை, மிகப்பெரிய வெற்றிகள். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 189 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, மூன்றாவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அதைவிட பெரிய வெற்றியை பெற்று அசத்தியது. 

2 மற்றும் 3வது போட்டிகளில் படுமோசமாக பேட்டிங் ஆடி படுதோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்க அணி, கடைசி டெஸ்ட் போட்டியிலும் மோசமாகவே பேட்டிங் ஆடிவருகிறது. ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவரும் இந்த போட்டி மழையால் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. முதல் நாள் ஆட்டத்தில் ஒரு செசனுக்கும் மேலாக மழையால் பாதிக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தின் இரண்டாவது செசனில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் சீரான இடைவெளியில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். 

தொடக்க வீரர் பீட்டர் மாலன் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த வாண்டெர் டசன் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழந்தார். வழக்கமாக பொறுப்புடனும் சிறப்பாகவும் ஆடும் தொடக்க வீரர் டீன் எல்கர் இந்த முறை 26 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். தன் கெரியரின் மோசமான ஃபார்மில் இருக்கும் கேப்டன் டுப்ளெசிஸ் 3 ரன்னில் நடையை கட்ட, டெம்பா பவுமா மற்றும் நோர்ட்ஜே ஆகியோர் தலா 6 ரன்களில் மார்க் உட்டின் பந்தில் ஆட்டமிழந்தனர். டி காக் மட்டும் ஒரு முனையில் நிலைத்து நிற்கிறார். 

Also Read - 2வது டி20 போட்டி.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் அடித்துள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்துள்ள நிலையில், சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணி படுகேவலமாக பேட்டிங் ஆடி 6 விக்கெட் இழப்பிற்கு வெறும் 88 ரன்கள் அடித்துள்ளது. எனவே இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்காவின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏனெனில் இனிமேல் இந்த சரிவிலிருந்து தென்னாப்பிரிக்க அணி மீண்டுவருவது நடக்காத காரியம்.