ராஞ்சியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் இரட்டை சதம்(212 ரன்கள்), ரஹானேவின் சதம்(115 ரன்கள்), ஜடேஜாவின் அரைசதம்(51) மற்றும் கடைசி நேர உமேஷ் யாதவின் காட்டடி பேட்டிங்கால் 497 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது செசனில் இந்திய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் அடித்திருந்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டீன் எல்கரை முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஷமி வீழ்த்திவிட்டார். ஷமி துல்லியமான லைன் லெந்த்தில் வீசிய பந்தை கடைசி நேரத்தில் அடிக்காமல் விட முயன்ற எல்கர், அந்த முயற்சியில் தோற்றார். அவர் பேட்டை பின்னால் எடுக்கும் நேரத்தில் பந்து பேட்டை உரசிச்சென்றது. அதை எந்த தவறும் செய்யாமல் அழகாக கேட்ச் பிடித்தார் சஹா. 

முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்க அணிக்கு அடுத்த ஓவரிலேயே அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரை வீசிய உமேஷ் யாதவ், அந்த ஓவரின் கடைசி பந்தில் டி காக்கை வீழ்த்தினார். முதல் 2 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், வெறும் 5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபட்டது. இன்றைய நாள் ஆட்டம் இனிமேல் தொடரவில்லை என்றால், இன்றும் 34 ஓவர்கள் பாதிப்பு. நேற்றைய ஆட்டத்திலேயே 32 ஓவர்கள் வீசப்படவில்லை. நேற்றே ஒரு செசன் வீணான நிலையில், இன்றும் அதுபோல் நடந்தால் அது இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றமாக அமையும்.