உலக கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆடிவருகின்றன. 

முதல் 3 போட்டிகளிலும் தொடர் தோல்வியை தழுவிய தென்னாப்பிரிக்க அணி, உலக கோப்பை தொடரில் தங்களது அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் வெஸ்ட் இண்டீஸுடன் ஆடுகிறது. அதேநேரத்தில் பாகிஸ்தானை முதல் போட்டியில் அடித்து துவம்சம் செய்து பெரிய வெற்றியை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவிடம் ஜெயிக்க வேண்டிய போட்டியில் தோற்றது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்பிலும் தென்னாப்பிரிக்க அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பிலும் களமிறங்கியுள்ளன. சவுத்தாம்ப்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தார். 

தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ஆம்லா களமிறங்கினர். ஆம்லாவை வெறும் 6 ரன்களில் வீழ்த்திய கோட்ரெல், மார்க்ரமையும் 5 ரன்களில் வெளியேற்றினார். 28 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது தென்னாப்பிரிக்க அணி. இதையடுத்து டி காக்குடன் கேப்டன் டுப்ளெசிஸ் ஜோடி சேர்ந்தார். டுப்ளெசிஸ் களத்திற்கு வந்த சிறுது நேரத்திலேயே மழை வந்ததால் ஆட்டம் தடைபட்டுள்ளது. 7.3 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை வந்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.