பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, அதிரடியான நடவடிக்கைகளையும் சிறந்த முன்னெடுப்புகளையும் முன்னெடுத்துவருகிறார். பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றதுமே, பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்திய கங்குலி, அடுத்ததாக, சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த டாப் 3 அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் மற்றொரு அணியையும் சேர்த்துக்கொண்டு சூப்பர் தொடர் நடத்த திட்டமிட்டுள்ளார். 

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆகிய நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். 2021 முதல் இதை நடத்தவும், ஒவ்வொரு ஆண்டும் அந்த 4 நாடுகளில் ஒன்றில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முதல் தொடரை இந்தியாவில் நடத்த கங்குலி திட்டமிட்டுள்ளார். ஐசிசி, அதிகபட்சமாக 3 அணிகள் ஆடும் முத்தரப்பு தொடருக்கு மட்டுமே அனுமதி வழங்குகிறது. 4 நாடுகள் தொடருக்கு அனுமதி வழங்குமா என்பது தெரியவில்லை. 

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. அதில், கிரிக்கெட் ஆடும் பெரிய அணிகளின் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் அவ்வப்போது கலந்தாலோசிப்பது வழக்கம். அந்தவகையில், பிசிசிஐ நிர்வாகிகளுடனான சந்திப்பில், நான்கு நாடுகள் ஆடும் சூப்பர் ஒருநாள் தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது எந்தளவிற்கு வளர்கிறது? சாத்தியப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

கங்குலியின் இந்த முன்னெடுப்பை பாராட்டிய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சி.இ.ஓ ராபர்ட்ஸ், பிசிசிஐ தலைவர் கங்குலி சொன்னது புதுமையான ஐடியா. கங்குலி பிசிசிஐ தலைவராகி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள்ளாக முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தி அசத்திவிட்டார். அடுத்ததாக சூப்பர் தொடர் என்ற சிறந்த புதுமையான ஐடியாவை கூறியுள்ளார். மற்றுமொரு புதுமையை நிகழ்த்த கங்குலி திட்டமிட்டுவிட்டார் என்று ராபர்ட்ஸ் புகழ்ந்திருந்தார். 

இந்நிலையில், இந்த ஐடியா குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸ், டாப் 3 அணிகள் என்று சொல்லப்படும் அந்த 3 அணிகள் தான் அதிகமான போட்டிகளில் ஆடுகின்றன. அந்த அணிகளுக்கு இடையேயும் அதிகமாக மோதிக்கொள்கின்றன, அவைதான் மற்ற அணிகளுடனும் அதிகமாக ஆடுகின்றன. இன்னும் அதிகமான அணிகளை இணைத்து ஆடவைத்தால் கிரிக்கெட் இன்னும் மேம்படும். சிறிய அணிகள் மிகக்குறைவான போட்டிகளில் தான் ஆடுகின்றன என்று டுப்ளெசிஸ் தெரிவித்தார்.