உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. 

அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி இந்த போட்டியில் ஆடியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி இலங்கையை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இலங்கை அணியின் தொடக்கவீரரும் கேப்டனுமான கருணரத்னே ரபாடா வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அதிரடியாக ஆடிய ஃபெர்னாண்டோ 30 ரன்களில் அவுட்டாக, அவரை தொடர்ந்து குசால் பெரேராவும் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் குசால் மெண்டிஸ், மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, திசாரா பெரேரா என யாருமே கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து கொண்டேயிருந்தனர். இதையடுத்து 203 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டானது. 

204 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டி காக், 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டு ப்ளெசிஸ் சிறப்பாக ஆடினார். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர். இந்த ஜோடியை கடைசி வரை இலங்கை பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. இருவருமே கடைசி வரை களத்தில் நின்று 38வது ஓவரிலேயே இலக்கை எட்டினர். 

டு ப்ளெசிஸ் 96 ரன்களுடனும் ஆம்லா 80 ரன்களுடனும் அவுட்டாகாமல் கடைசி வரை இருந்தனர். 38வது ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்க அணி. தென்னாப்பிரிக்க அணி இனிமேல் அரையிறுதிக்கு முன்னேற முடியாது என்றாலும் ஆறுதல் வெற்றியை பெற்றது. இந்த தோல்வியை அடுத்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இலங்கை அணி.