விசாகப்பட்டினத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. ரோஹித் சர்மா 176 ரன்களையும் மயன்க் அகர்வால் 215 ரன்களையும் குவித்தனர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி ஒருமுனையில் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் நங்கூரமிட்டு சிறப்பாக ஆடிய டீன் எல்கர் சதமடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய கேப்டன் டுப்ளெசிஸ் அரைசதமும் டி காக் சதமும் அடித்தனர். முதல் 4 விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்ட தென்னாப்பிரிக்க அணியை, எல்கர், டுப்ளெசிஸ் மற்றும் டி காக் ஆகிய மூவரும் இணைந்து தென்னாப்பிரிக்க அணியை காப்பாற்றியதோடு தூக்கியும் நிறுத்தினர். 

மளமளவென விக்கெட்டுகளை இழந்தாலும், ஒரு கட்டத்தில் சுதாரித்து ஆடிய தென்னாப்பிரிக்க வீரர்கள், எளிதாக விட்டுக்கொடுத்துவிடாமல் செம டஃப் ஃபட் கொடுத்து நல்ல ஸ்கோரை எடுத்துவதற்கு எல்கர், டுப்ளெசிஸ், டி காக் உதவினர். எல்கர் 160 ரன்களையும் டி காக் 111 ரன்களையும் குவித்தனர். டுப்ளெசிஸ் 55 ரன்கள் அடித்தார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்களை அடித்திருந்தது தென்னாப்பிரிக்க அணி. அந்த 8 விக்கெட்டுகளிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அஷ்வின், நான்காம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேசவ் மஹராஜை வீழ்த்திவிட்டார். 

ஆனால் கடைசி விக்கெட்டுக்கு முத்துசாமியுடன் ஜோடி சேர்ந்த ரபாடா, ஒரு சில பவுண்டரிகளை அடித்தார். முத்துசாமியும் ஒன்றிரண்டு பவுண்டரியை அடிக்க, தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஒருவழியாக ரபாடாவை அஷ்வின் வீழ்த்த, 431 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட்டானது. 

502 ரன்களை குவித்த இந்திய அணி, வெறும் 71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது.