இந்திய அணி தேர்வு விஷயத்தில் தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி. 

விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகிய விவகாரத்திலேயே பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலியின் கருத்துடன் விராட் கோலி முரண்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டது. கங்குலி - கோலி இடையே மோதல் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

அதுமுதலே கங்குலி குறித்து சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அண்மையில், இந்திய அணி தேர்வாளர்கள், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருடன் கங்குலி அமர்ந்திருந்த புகைப்படம் செம வைரலானது. 

இதையடுத்து இந்திய அணி தேர்விலும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலியின் குறுக்கீடு இருக்கிறது என்று ரசிகர்கள் பேசத்தொடங்கினர். இதுதொடர்பாக கங்குலி மீது விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில், அதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளார் கங்குலி.

இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, இதுமாதிரியான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். நான் பிசிசிஐயின் தலைவர். எனது பணி என்னவோ அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். செலக்‌ஷன் கமிட்டி மீட்டிங்கில் நான் கலந்துகொண்டதாக ஒரு புகைப்படம் வைரலானதை பார்த்தேன். அது செலக்‌ஷன் கமிட்டி மீட்டிங்கே இல்லை. அந்த புகைப்படத்தில் இருந்த ஜெயேஷ் ஜார்ஜ் செலக்‌ஷன் கமிட்டி உறுப்பினரே அல்ல. நான் 424 சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கிறேன்(எனக்கு விஷயங்கள் நன்றாக தெரியும் என்ற தொனியில்). இதை மக்களுக்கு நினைவுபடுத்துவதில் தவறில்லை என்று கூறி சிரிப்புடன் முடித்தார் கங்குலி.