பிசிசிஐயின் புதிய தலைவர் பதவிக்கு போட்டியே இல்லாமல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் கங்குலி. அவர் மட்டுமே தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பதால், வரும் 23ம் தேதி போட்டியே இல்லாமல் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார் கங்குலி. 

சிறந்த நிர்வாகத்திறமையும் தலைமைத்துவ பண்புகளும் கொண்டவர் கங்குலி என்பது அவர் கேப்டனாக இருந்த காலத்திலேயே அவரது செயல்பாடுகளின் மூலம் அனைவருக்கும் தெரியும். எனவே பிசிசிஐயின் தலைவராக சிறப்பாக செயல்பட்டு, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு திறமைக்கு முன்னுரிமை அளித்து இந்திய கிரிக்கெட்டை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவார் என்பதில் சந்தேகமில்லை. 

இந்நிலையில், பிசிசிஐ தலைவரானதும், அவர் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை குறித்து பேசிய கங்குலி, முதல் தர கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்தான் எனது முழு கவனமும் உள்ளது. முதல் தர கிரிக்கெட் தான் எல்லாவற்றிற்குமான அடிப்படை மற்றும் பலம். முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளில் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். ஆனால் அதெல்லாம் நடந்த பாடில்லை. எனவே முதல் தர கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் எனது முக்கியமான பணி என கங்குலி தெரிவித்துள்ளார்.