2016ம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி விண்ணப்பித்திருந்தார். அப்போது, தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் கிரிக்கெட் ஆலோசனைக்குழுவின் தலைவர் கங்குலி. கங்குலி தலைமையிலான அந்த குழுவில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகிய இருவரும் இருந்தனர். 

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளேவும் விண்ணப்பித்திருந்தார். நேர்காணலுக்கு அனில் கும்ப்ளே நேரில் வந்தார். ஆனால் சாஸ்திரி பாங்காக்கில் இருந்தார். தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துவிட்டு நேர்காணலுக்கு வராமல் பாங்காக்கில் இருந்தால் எப்படி..? தலைமை பயிற்சியாளர் ஆக வேண்டும் என்று விரும்பினால், நேர்காணலுக்கு நேரில் வரவேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார் கங்குலி. 

கங்குலிக்கும் சாஸ்திரிக்கும் இடையே ஏற்கனவே ஒத்துவராது. இதில் இந்த சம்பவம் வேறு நடந்ததால் இருவருக்கும் இடையேயான விரிசல் அதிகமானது. ஆனாலும் இருவருக்கும் இடையே எவ்வளவு மோதல் இருந்தாலும், இணக்கமான உறவும் இருந்தேவந்தது. இரண்டும் மாறி மாறி இருந்தது. இந்திய மீண்டும் 2017ல் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளர் ஆனார். 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான  சாஸ்திரியை பல விஷயங்களில் விமர்சித்துள்ளார் கங்குலி. ஆனாலும் இம்முறை சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் ஆனபோது, கங்குலி அவருக்கு ஆதரவாகவே பேசியிருந்தார். இந்நிலையில், கங்குலி பிசிசிஐயின் தலைவராகிறார். 

பிசிசிஐயின் புதிய தலைவராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள கங்குலியிடம், சாஸ்திரி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு வேடிக்கையாக பதிலளித்தார் கங்குலி. பிசிசிஐயின் தலைவர் ஆகப்போகிறீர்கள். ஹெட் கோச் சாஸ்திரியிடம் ஏதாவது பேசினீர்களா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, ஏன், சாஸ்திரி இப்போது ஏதாவது செய்தாரா என்ன? என்று பதில் கேள்வி எழுப்பினார்.