பிசிசிஐ-யின் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து விவாதிப்பதற்காக, பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ப்ரிஜேஷ் படேலின் பெயரை தலைவர் பதவிக்கு முன்மொழிந்தார் என்.ஸ்ரீனிவாசன். ஆனால் பெரும்பாலான கிரிக்கெட் சங்கங்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு ஆதரவு அதிகமாக இருந்ததை அடுத்து, பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்துவரும் கங்குலி, அந்த பதவியை ராஜினாமா செய்யவேண்டும். வரும் 23ம் தேதி பிசிசிஐ-யின் தலைவராக கங்குலி பொறுப்பேற்கவுள்ளார். 

அதேபோல பிசிசிஐ-யின் செயலாளராக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் பொருளாளராக அனுராக் தாகூரின் சகோதரரான அருண் துமாலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

பிசிசிஐ-யின் தலைவர் பதவிக்கு கங்குலி சரியான தேர்வு. தலைமைத்துவ பண்புகளும் நிர்வாகத்திறமையும் வாய்ந்த கங்குலி, பிசிசிஐ-யின் தலைவராக செயல்படுவார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சூதாட்ட சர்ச்சையில் இந்திய கிரிக்கெட்டே சிதைந்து கிடந்த 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, இளம் வீரர்களை கொண்டு வலுவான அணியாக உருவாக்கி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை தலைநிமிர வைத்து, இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர் கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது.