இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, இந்திய  கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியமைத்தவர். சூதாட்டப் புகாருக்கு பின்னர், மக்களின் நம்பிக்கையை இழந்திருந்த இந்திய அணியை கட்டமைத்து, வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்து, இழந்த மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து, அணியை கட்டமைத்து தலைநிமிர வைத்தவர். 

சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், தோனி என பல மேட்ச் வின்னர்களை இந்திய கிரிக்கெட்டுக்கு கொடுத்தவர். கங்குலி சிறந்த பேட்ஸ்மேன் என்றல்லாது, ஒரு சிறந்த கேப்டனாகவும் தலைவனாகவும் தான் அறியப்படுகிறார். 

சிறந்த கேப்டனாக திகழ்ந்த அதேவேளையில், சிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து, எதிரணிகளை தனது அதிரடியான பேட்டிங்கால் தெறிக்கவிட்டவர் கங்குலி. ஆஃப் திசையின் கடவுள் என்று கங்குலி அழைக்கப்படுகிறார். கங்குலி ஆஃப் திசையில் அடிக்கும் ஷாட்டுகளும், ஸ்பின் பவுலிங்கில் இறங்கிவந்து சிக்ஸர் அடிக்கும் ஷாட்டுகளும் கிரிக்கெட் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்படுபவை. 

இந்திய அணிக்காக 1996ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு வரை ஆடினார். 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7212 ரன்களையும், 311 ஒருநாள் போட்டிகளில் 11,363 ரன்களையும் குவித்துள்ளார். அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பலுடன் கங்குலிக்கு மோதல் ஏற்பட்டது. கங்குலியை டார்கெட் செய்து ஓரங்கட்டினார் கிரேக் சேப்பல். அந்த மோதல் மற்றும் சர்ச்சையுடனேயே கங்குலியின் கெரியரும் முடிந்தது. கங்குலி ஆடிய கடைசி டெஸ்ட் போட்டியில் அவரை கௌரவிக்கும் விதமாக, கேப்டன் தோனி, கடைசி சில ஓவர்களில் கங்குலியை கேப்டன்சி செய்ய வைத்து, தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி, இப்போது கூட களத்தில் இறங்கி டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னால் ரன்களை குவிக்க முடியும் என்று கங்குலி தெரிவித்துள்ளார். 

பெங்காலி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய கங்குலி, நான் கூடுதலாக 2 ஒருநாள் தொடர்களில் ஆடியிருந்தால், நிறைய ஸ்கோர் செய்திருப்பேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் நாக்பூர் டெஸ்ட்டுடன் ஓய்வுபெறாமல், கூடுதலாக 2 டெஸ்ட் தொடர்களில் ஆடியிருந்தால் அதிலும் ஸ்கோர் செய்திருப்பேன். அவ்வளவு ஏன், இப்போது 3 மாதம் அவகாசம் கொடுங்க.. 3 ரஞ்சி போட்டிகளில் ஆடினால், இப்போதுகூட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடி ஸ்கோர் செய்வேன் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.