இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் அடித்த ஸ்மித், ஆஷஸ் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். 

ஆஷஸ் தொடரின் முதல் போட்டிதான், ஒன்றரை ஆண்டுக்கு பிறகு ஸ்மித் களமிறங்கிய முதல் போட்டி. தடைக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து மிரட்டினார். முதல் போட்டியில் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக ஸ்மித் தான் திகழ்ந்தார். ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு ஸ்மித் தான் முக்கிய காரணம். 

அந்த போட்டியில் அடித்த சதங்களின் மூலம் பல சாதனைகளை வாரி குவித்தார் ஸ்மித். இந்நிலையில், லார்ட்ஸில் நடந்துவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் அபாரமாக ஆடி 92 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, 258 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிய, மறுமுனையில் வழக்கம்போலவே நங்கூரம் போட்டு இங்கிலாந்து அணியை வெறுப்பேற்றினார் ஸ்மித். 

அபாரமாக ஆடிய ஸ்மித், 92 ரன்களில் வோக்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். 8 ரன்களில் சதத்தை தவறவிட்டார் ஸ்மித். சதத்தை தவறவிட்டிருந்தாலும், சாதனையை தவறவிடவில்லை. இந்த 92 ரன்களுடன் சேர்த்து, ஆஷஸ் தொடரில் தொடர்ச்சியாக 7 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற சாதனையை ஸ்மித் படைத்துள்ளார். 

இதற்கு முன்னதாக மைக் ஹசி, 2009-2010ல் ஆஷஸ் தொடரில் தொடர்ச்சியாக 6 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்திருந்ததுதான் சாதனையாக இருந்துதது. தற்போது மைக் ஹசியின் சாதனையை முறியடித்து ஸ்மித் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ஆஷஸ் தொடரில் ஸ்மித்தின் கடைசி 7 இன்னிங்ஸ்களில் அவர் அடித்த ஸ்கோர் - 239, 76, 102*, 83, 144, 142, 92.