சிறந்த பேட்டிங் அணியாக மட்டுமே அறியப்பட்ட இந்திய அணி, பும்ராவின் வருகைக்கு பிறகு மிகச்சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டில், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷாந்த் சர்மா, பும்ரா, ஷமி ஆகியோரும் அசத்திவருகின்றனர்.

டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அசத்துகிறார் பும்ரா. இந்திய அணிக்கு கிடைத்த வரப்பிரசாதமாக திகழ்கிறார். அவரது வருகைக்கு பிறகு இந்திய அணி பவுலிங்கிலும் சிறந்த அணியாக திகழ்கிறது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த மிகப்பெரிய வெற்றிக்கு இந்திய அணியின் பவுலிங் முக்கியமான காரணம். முதல் இன்னிங்ஸில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதனால் இரண்டாவது இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் சுருண்டதால், இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் சர் ஆண்டி ராபர்ட்ஸ் பேசியுள்ளார். 

பும்ரா தலைசிறந்த பவுலர். அவரது வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன் தான் அவரது பலமே. அவர் சிறந்த பவுலராக இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில், இஷாந்த் சர்மா தான் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டின் தலைவர். இந்திய அணி எப்போதெல்லாம் சிக்கலில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் விக்கெட் எடுத்துக்கொடுப்பவர் இஷாந்த் சர்மா. அதனால் தான் அவர் தலைவர். அவர் உயரமாக இருப்பது அவரது மிகப்பெரிய பலம். அதை அவர் சரியாக பயன்படுத்தி நல்ல லைன் அண்ட் லெந்த்தில் தொடர்ச்சியாக வீசுகிறார் என்று ஆண்டி ராபர்ட்ஸ் புகழ்ந்தார்.