IPL 2023: ஷுப்மன் கில் காட்டடி சதம்..! நாக் அவுட் போட்டியில் மும்பைக்கு மிகக்கடின இலக்கை நிர்ணயித்தது குஜராத்
ஷுப்மன் கில்லின் அபாரமான சதத்தால் 20 ஓவரில் 233 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 2வது தகுதிப்போட்டியில் 234 ரன்கள் என்ற கடினமான இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்தது.
ஐபிஎல் 16வது சீசன் ஃபைனலுக்கு சிஎஸ்கே அணி முன்னேறிய நிலையில், முதல் தகுதிப்போட்டியில் தோற்ற குஜராத் டைட்டன்ஸும், எலிமினேட்டரில் ஜெயித்த மும்பை இந்தியன்ஸும் இன்று நடந்துவரும் 2வது தகுதிப்போட்டியில் ஆடிவருகின்றன.
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
இஷான் கிஷன், ரோஹித் சர்மா (கேப்டன்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், மோஹித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் சஹா 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் காட்டடி அடித்து சிக்ஸர் மழை பொழிந்த மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் 49 பந்தில் சதமடித்தார். 60 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 129 ரன்களை குவித்தார்.
சாய் சுதர்சன் 31 பந்தில் 43 ரன்களும், ஹர்திக் பாண்டியா 13 பந்தில் 28 ரன்களும் விளாச, 20 ஓவரில் 233 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 234 ரன்கள் என்ற கடின இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்தது.