இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில், கம்பீரின் சாதனை ஒன்றை தகர்த்தெறிந்துள்ளார். 

இந்தியா ஏ அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இதையும் வென்றுவிட்டது. 

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியை முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கே இந்தியா ஏ அணி சுருட்டியது. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 14 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் நைட் வாட்ச்மேன் நதீமும் 13 ரன்களில் ஆட்டமிழக்க, ஷுப்மன் கில்லும் ஹனுமா விஹாரியும் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான கில், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்தார். 

250 பந்துகளில் 204 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 365 ரன்கள் அடித்து இந்தியா ஏ அணி டிக்ளேர் செய்தது. 373 ரன்கள் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி களமிறங்கியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் அடித்துள்ளது. 

இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் கம்பீரின் சாதனை ஒன்றை தகர்த்தெறிந்துள்ளார் கில். கம்பீர் தனது 20 வயதில், ஜிம்பாப்வேவில் 2002ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்தியா போர்டு பிரசிடெண்ட்ஸ் லெவன் அணியில் ஆடி இரட்டை சதம் அடித்தார். அந்த போட்டியில் கம்பீர் 218 ரன்கள் அடித்தார். அந்த இரட்டை சதத்தை அடிக்கும்போது கம்பீருக்கு 21 வயது. ஆனால் தற்போது இரட்டை சதமடித்திருக்கும் கில்லுக்கு வெறும் 19 வயதுதான். இதன்மூலம் இளம் வயதில் இரட்டை சதமடித்த கம்பீரின் சாதனையை கில் முறியடித்துள்ளார்.