யுவராஜ் சிங் ஓரங்கட்டப்பட்டதற்கு பிறகு இந்திய அணியில் அவரது இடத்தை இதுவரை யாராலும் நிரப்ப முடியவில்லை. உலக கோப்பைக்கு முன்பாக இரண்டு ஆண்டுகள் நான்காம் வரிசை வீரருக்கான தேடுதல் படலம் நடத்தப்பட்டது. ஆனாலும் உலக கோப்பைக்கு முன்னதாக சரியான வீரரை இந்திய அணி நிர்வாகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

அதன் எதிரொலியாக உலக கோப்பை தொடரிலும் மிடில் ஆர்டர் படுமோசமாக சொதப்பியது. கடைசியில் உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் வெளியேறியதற்கும் மிடில் ஆர்டரே பெரிய காரணமாக அமைந்துவிட்டது. 

உலக கோப்பை முடிந்ததுமே, இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண அதிரடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ஷ்ரேயாஸ் ஐயரும் மனீஷ் பாண்டேவும் எடுக்கப்பட்டுள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால் ஒருநாள் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் தான் நான்காம் வரிசை என்பதை உறுதி செய்யும் விதமாக முதல் போட்டியில் அவர் தான் நான்காம் வரிசை வீரராக எடுக்கப்பட்டிருந்தார். அந்த போட்டி மழையால் ரத்தானது. இன்று நடக்கும் இரண்டாவது போட்டியிலும் ஷ்ரேயாஸ் ஐயர்தான் இறங்கவுள்ளார்.

இந்திய அணியில் மீண்டும் ஆடும் தருணத்திற்காக காத்திருக்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், இந்திய அணியில் நான்காம் வரிசைக்கான இடம் இன்னும் நிரப்பப்படவில்லை. நான் தனிப்பட்ட முறையில் நான்காம் வரிசையை விரும்பவில்லை. நான்காம் வரிசை தான் என்னுடைய பேட்டிங் ஆர்டர் என்றும் கருதவில்லை. எந்தவரிசையில் இறக்கினாலும், சூழலுக்கு ஏற்றவாறு ஆடுவேன். அதனால் அணி நிர்வாகம் என்னை எந்தவரிசையில் இறக்கினாலும் நான் ஆடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

முக்கியமான பேட்டிங் ஆர்டரான நான்காம் வரிசையை அவருக்காக அலாட் செய்திருக்கும் நிலையில், நான்காம் வரிசை மீது ஈடுபாடு இல்லாத மாதிரி பேசியிருக்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர்.

ஷ்ரேயாஸ் ஐயர் 2017ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரில் அறிமுகமானார். அந்த தொடரில் நன்றாக ஆடியபோதிலும் அதன்பின்னர் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. உலக கோப்பை அணியிலும் புறக்கணிக்கப்பட்ட ஐயர், தற்போது மீண்டும் இந்திய அணிக்காக ஆடவுள்ளார். அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.