இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

அறிமுக வீரர்கள் பிரித்வி ஷாவும் மயன்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக இறங்கினர். அறிமுக வீரர்கள் இருவரும் இணைந்து ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தையே அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். பிரித்வி ஷா 20 ரன்களில் ஆட்டமிழக்க, மயன்க் அகர்வால் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் கேப்டன் கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து சிறப்பாக ஆடினர். கோலி வழக்கம்போலவே தனது கிளாசான பேட்டிங்கை ஆடி அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த மாத்திரத்திலேயே, இஷ் சோதியின் கூக்ளியில் கிளீன் போல்டாகி வெளியேறினார். 

இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயருடன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்தார். ஆரம்பத்தில் மெதுவாக ஆடிய ஷ்ரேயாஸ், களத்தில் நிலைத்த பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். கேஎல் ராகுல் களத்திற்கு வந்தது முதலே சீராக ரன்களை சேர்த்தார். 

ராகுல் ஒருமுனையில் சிக்ஸர்களாக விளாசி கொண்டிருக்க, ஷ்ரேயாஸ் ஐயர் பவுண்டரிகளாக விளாசினார். டிம் சௌதி வீசிய 40வது ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், அடுத்த 2 ஓவர்களிலும் தலா ஒரு பவுண்டரியை அடித்தார். அபாரமாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 

இந்திய அணியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்த நான்காம் வரிசை சிக்கலுக்கு தீர்வாக அமைந்த ஷ்ரேயாஸ் ஐயர், சிறப்பாக ஆடி மிடில் ஆர்டருக்கு வலு சேர்ப்பதுடன், சூழலுக்கு ஏற்ப அபாரமாக ஆடி அசத்துகிறார். இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது சத கணக்கை தொடங்கியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். ராகுலும் அரைசதம் அடித்துவிட்டார். இந்திய அணி 43 ஓவரில் 277 ரன்கள் அடித்துள்ளது. எனவே 340-350 ரன்கள் வரை குவிக்க வாய்ப்புள்ளது.