25 வயதான இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர், இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் மிடில் ஆர்டரில் நிரந்தர இடம்பிடித்துவிட்டார். ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான 4ம் வரிசை வீரரை இந்திய அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும், 2017 இறுதியிலிருந்து வலைவீசி தேடியது. ஆனால் அந்த வரிசைக்கு சரியான வீரர் கிடைக்கவேயில்லை. 

உலக கோப்பையிலும் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பியது. உலக கோப்பையில் அரையிறுதியுடன் இந்திய அணி வெளியேறியதற்கு பின்னர், ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர், அருமையாக ஆடி அணியில் நிரந்தர இடம்பிடித்துவிட்டார். 

ஐபிஎல்லிலும் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வதுடன் சிறந்த கேப்டனாகவும் உருவெடுத்துள்ளார். 2015ம் ஆண்டிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர், டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு ஆடிவருகிறார். 2018ம் ஆண்டு ஐபிஎல் சீசனின் பாதியில் கவுதம் கம்பீர் விலகியதால், டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஷ்ரேயாஸ் ஐயர், 2 சீசன்களாக சிறப்பாக கேப்டன்சி செய்தார். ஐபிஎல்லின் இளம் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர், கடந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸை, நீண்ட இடைவெளிக்கு பிறகு, பிளே ஆஃபிற்கு அழைத்து சென்றார். 

ஐபிஎல்லிலும் இந்திய அணியிலும் சிறந்த வீரராக திகழும் ஷ்ரேயாஸ் ஐயர், தனது கெரியரில் யாருக்குமே தெரியாத ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். 2015ல் தனது முதல் ஐபிஎல் சீசனில் நடந்த சம்பவம் குறித்து ஷ்ரேயாஸ் ஐயர் பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், 2015 ஐபிஎல் சீசன் தான் எனது முதல் சீசன். அந்த சீசனில் உடைந்த விரலுடன் முழு சீசனிலும் ஆடி 439 ரன்கள் அடித்தேன். எனது விரலில் அடிபட்டிருந்தது கேரி கிறிஸ்டனுக்கு தெரியும். ஃபீல்டிங் செய்யும்போது, எங்கேயாவது ஒளிந்து நின்றுகொள்.. நீ அணிக்காக பேட்டிங் ஆடினால் போதும் என்று கூறி எனக்கு வாய்ப்பளித்தார். நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரியாது என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். 

2015 ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக 14 போட்டிகளில் ஆடி ஷ்ரேயாஸ் ஐயர் 439 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.