தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 174 ரன்களை குவித்தது. 

175 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி, லிட்டன் தாஸ் மற்றும் சௌமியா சர்க்கார் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் 12 ரன்களுக்கே இழந்துவிட்டது. ஆனாலும் தொடக்க வீரர் முகமது நைம் நிலைத்து நின்று இந்திய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். ஸ்பின் பவுலிங், ஃபாஸ்ட் பவுலிங் என இரண்டையுமே அடித்து ஆடி, இந்திய அணியை அச்சுறுத்தினார். 

13 ஓவரில் 110 ரன்களை குவித்தது வங்கதேச அணி. 13வது ஓவரின் கடைசி பந்தில் மிதுனின் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் தீபக் சாஹர். அதன்பின்னர் நம்பிக்கையை பெற்ற இந்திய அணி, அடுத்தடுத்து வங்கதேச அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த நைமின் விக்கெட்டை ஷிவம் துபே வீழ்த்தினார். ஷிவம் துபே 3 விக்கெட்டுகளையும் தீபக் சாஹர் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெற செய்தனர். 

முகமது நைம் மற்றும் முகமது மிதுன் ஆகிய இருவரும் மிடில் ஓவர்களில் அபாரமாக ஆடியபோது, இந்திய அணி தோல்வியை நோக்கி பயணித்தது. அப்போது ரசிகர்கள் மட்டுமல்லாது வீரர்களும் கூட நம்பிக்கையிழந்து இருந்தனர். 13வது ஓவரில் மிதுன் விக்கெட் விழுந்தபின்னர், இந்திய அணி ஆட்டத்துக்குள் வந்தது. 

மிதுன் விக்கெட்டுக்கு பின்னர், நம்பிக்கையிழந்து இருந்த வீரர்களை அழைத்து கேப்டன் ரோஹித் சர்மா உத்வேகப்படுத்தியுள்ளார். அந்த தகவலை ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், நாங்கள்(வீரர்கள்) ஒரு கட்டத்தில் மிகுந்த அழுத்தத்தில் இருந்தோம். ஆரம்பத்தில் நாம் கொஞ்சம் அசால்ட்டாக இருந்ததால் வங்கதேச வீரர்கள் நல்ல தொடக்கத்தை அமைத்துவிட்டனர். இதையடுத்து அழுத்தம் அதிகரித்தது. உடனடியாக வீரர்கள் அனைவரையும் அழைத்து பேசினார் ரோஹித். அதன்பின்னர் தான் அனைவரும் உத்வேகத்துடன் ஆடி வெற்றியை உறுதி செய்தோம் என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.