யுவராஜ் சிங் ஓரங்கட்டப்பட்டதற்கு பிறகு இந்திய அணியில் அவரது இடத்தை இதுவரை யாராலும் நிரப்ப முடியவில்லை. உலக கோப்பைக்கு முன்பாக இரண்டு ஆண்டுகள் நான்காம் வரிசை வீரருக்கான தேடுதல் படலம் நடத்தப்பட்டது. ஆனாலும் உலக கோப்பைக்கு முன்னதாக சரியான வீரரை இந்திய அணி நிர்வாகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

அதன் எதிரொலியாக உலக கோப்பை தொடரிலும் மிடில் ஆர்டர் படுமோசமாக சொதப்பியது. கடைசியில் உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் வெளியேறியதற்கும் மிடில் ஆர்டரே பெரிய காரணமாக அமைந்துவிட்டது. 

உலக கோப்பை முடிந்ததுமே, இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண அதிரடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ஷ்ரேயாஸ் ஐயரும் மனீஷ் பாண்டேவும் எடுக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் இருவருமே வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியில் சிறப்பாக ஆடினர். ஷ்ரேயாஸ் ஐயருக்கு 2017ல் இலங்கைக்கு எதிரான தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது. அதன்பின்னர் வாய்ப்பளிக்கப்படவில்லை. உலக கோப்பை அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. 

அவர் தொடர்ச்சியாக உள்நாட்டு தொடர்கள் மற்றும் இந்தியா ஏ அணியில் சிறப்பாக ஆடியதால் அவருக்கு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில், அணியில் வாய்ப்பு கொடுத்தால் மட்டும் போதாது; திறமையான வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்கும் வரை கொஞ்சம் பொறுமை காத்து அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், உண்மையான திறமைசாலிகளுக்கு அவர்களது திறமையை நிரூபிக்கும் வரை கணிசமான வாய்ப்புகளை தொடர்ந்து அளிக்க வேண்டும். அப்படியில்லாமல் அணியில் எடுப்பதும் தூக்குவதுமாக இருந்தால் அந்த குறிப்பிட்ட வீரரின் தன்னம்பிக்கையே சிதைந்துவிடும். மேலும் அது நல்ல அணுகுமுறையாகவும் இருக்காது என்று ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.