யுவராஜ் சிங் இந்திய அணியிலிருந்து 2017ம் ஆண்டு இறுதியில் ஓரங்கட்டப்பட்ட பிறகு, இந்திய அணி நிர்வாகத்தால் சரியான நான்காம் வரிசை பேட்ஸ்மேனை கண்டறிய முடியவில்லை. அதன் விளைவாக உலக கோப்பையையும் வெல்ல முடியாமல், தொடரின் அரையிறுதியில் தோற்று வெளியேறியது. 

உலக கோப்பைக்கு பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் ஆடினார். இதையடுத்து ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டுவிதமான போட்டிகளிலும் நான்காம் வரிசை வீரராக ஆடிவருகிறார். 

நான்காம் வரிசையில் இறங்கி, சூழலுக்கு ஏற்ப அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இன்னிங்ஸ் பில்ட் செய்ய வேண்டிய சூழலில், சிங்கிள் ரொடேட் செய்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடும் ஷ்ரேயாஸ், அணி நல்ல ஸ்கோருடன் வலுவாக இருக்கும் சூழலில், அடித்து ஆடி ஸ்கோரை மேலும் உயர்த்துகிறார். இவ்வாறு சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு ஆடுகிறார். ஒரு நான்காம் வரிசை பேட்ஸ்மேன் எப்படி இருக்க வேண்டுமோ, அதற்கான அத்தனை தகுதிகளுடனும் திறமையுடனும் திகழ்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர். வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மெகா ஸ்கோரை நோக்கி இந்திய அணி சென்று கொண்டிருந்த நிலையில், ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன், ஒரே ஓவரில் 31 ரன்களை குவித்தார். 

இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவிட்ட ஷ்ரேயாஸ் ஐயர், ஒரு பேட்ஸ்மேனாக தான் மேம்பட யார் காரணம் என்பதை தெரிவித்துள்ளார். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கட்டாக்கில் நடக்கிறது. 

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், தான் ஒரு சிறந்த வீரராக உருவானதற்கு ரிக்கி பாண்டிங் தான் காரணம் என்று தெரிவித்தார். ரிக்கி பாண்டிங், ஐபிஎல்லில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுவருகிறார்.

பாண்டிங் குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், ரிக்கி பாண்டிங் மிகவும் பாசிட்டிவான மனிதர். ஒவ்வொரு வீரருக்கும் ஆதரவாக இருந்து அவர்களை ஊக்குவிப்பார். எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைத்து வீரர்களையும் ஒரே மாதிரியாக பாவிப்பார். அவருக்கு இயல்பாகவே பயிற்சியாளருக்கான அனைத்து தகுதிகளும் திறமைகளும் பண்புகளும் உள்ளன. வீரர்களின் திறமையை அறிந்து அவர்களை கையாளும் மற்றும் பயன்படுத்தும், ரிக்கி பாண்டிங்கின் திறமை அபாரமானது என்று பாண்டிங்கை புகழ்ந்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். மேலும் தான் ஒரு கிரிக்கெட் வீரராக இன்று அடைந்திருக்கும் மேம்பாட்டிற்கு ரிக்கி பாண்டிங் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.