இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கியது. இந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடப்பதால், பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி ஒரேயொரு மாற்றத்துடன் களமிறங்கியது. ஸ்பின்னர் ஜெயந்த் யாதவுக்கு பதிலாக அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்).
இலங்கை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. காயத்தால் விலகிய பதும் நிசாங்காவிற்கு பதிலாக குசால் மெண்டிஸ் அணியில் சேர்க்கப்பட்டார். லஹிரு குமாராவிற்கு பதிலாக பிரவீன் ஜெயவிக்ரமா ஆடுகிறார்.
இலங்கை அணி:
திமுத் கருணரத்னே (கேப்டன்), லஹிரு திரிமன்னே, குசால் மெண்டிஸ், ஆஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), சுரங்கா லக்மல், லசித் எம்பல்டேனியா, விஷ்வா ஃபெர்னாண்டோ, பிரவீன் ஜெயவிக்ரமா.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 2வது ஓவரிலேயே வெறும் 4 ரன்னுக்கு ரன் அவுட்டாகி அவரது விக்கெட்டை அவரே தாரைவார்த்தார். ரோஹித் சர்மாவும் 15 ரன்னில் எம்பல்டேனியாவின் சுழலில் ஆட்டமிழந்தார்.
3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரியும் விராட் கோலியும் சிறப்பாக பேட்டிங் ஆடினர். நன்றாக விளையாடிக்கொண்டிருந்த விஹாரி 31 ரன்னில் ஜெயவிக்ரமாவின் சுழலில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் விராட் கோலி 23 ரன்னில் பந்து பவுன்ஸ் ஆகாததால் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 39 ரன்னில் ஆட்டமிழக்க, ஜடேஜா 4 ரன்னில் வெளியேறினார். பந்து பயங்கரமாக டர்ன் ஆனதாலும், கணிக்க முடியாத பவுன்ஸாலும் அனைத்து வீரர்களும் மளமளவென ஆட்டமிழக்க, ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் அபாரமாக அடித்து ஆடினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய அஷ்வினும் 13 ரன்னுக்கு வெளியேற, அக்ஸர் படேல் 9 ரன்னில் நடையை கட்டினார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர், 98 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இந்த பிட்ச்சில் தடுப்பாட்டம் ஆடுவது சரிப்பட்டுவராது என்பதால் அதிரடியாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர், 8 ரன்னில் சதத்தை தவறவிட்டார். இதையடுத்து இந்திய அணி 2வது செசன் முடியும்போது 252 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது.
ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருப்பதால், அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்களை எதிர்கொள்வது இலங்கைக்கு கடும் சவாலாக இருக்கும்.
